Sunday, 16 August 2015

2015 ஹோண்டா யுனிகார்ன் 160

இந்தியாவில் ஹோண்டா என்றவுடன் பலரின் நினைவுக்கு வருவது ஆக்டிவா தான். ஆனால் தங்களால் பைக் தயாரிக்க முடியும் என்று நிருபிக்க உதவியது 2005ல் அறிமுகம் ஆன யுனிகார்ன் 150. ஏனேன்றால் ஒரு பைக்கிற்கு தேவையான மைலேஜ், போதுமான பவர் மற்றும் ஹேண்ட்லிங், குறைந்த விலை மற்றும் மெயின்டனென்ஸ் என்று இருந்ததால், விற்பனை எகிறியது. ஆனால் யமஹா FZ மற்றும் பேஸர், பஜாஜ் பல்சர், டிவிஎஸ் அப்பாச்சி, சுசுகி ஜிக்ஸர் மற்றும் SF என போட்டியாளர்கள் அதிகரிக்க, விற்பனை இறங்கியது. அதனால் ஹோண்டா 2015ல், ஹோண்டா யுனிகார்ன் 160 எனும் புதிய மேம்படுத்தப்பட்ட வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. 10 சிசி ஏற்றத்தால் யூனிகார்னின் பெர்ஃபாமென்ஸில் ஏதும் மாற்றம் உண்டாகியிருக்கிறதா என்பதை பார்ப்போம்.

டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:





முதலில் தெரியும் மாற்றம், ஷார்ப்பான கோடுகள் கொண்ட பைக்கின் டிசைன். ஆனால் ஹெட்லாம்ப் மிரட்டலாக இல்லை. வாகனத்தின் நிலம், அகலம், உயரம் மாற்றியமைக்கப்பட்டுள்ளது. சைட் பேனல்கள் மற்றும் எக்ஸாஸ்ட் டிசைன் மாறியுள்ளது. டெயில் லைட் டிஸைன், சிறப்பாக உள்ளது. மற்றபடி பின்பக்க டிசைனில் குறிப்பிட்டு கூறும் அளவிற்கு எதுவும் இல்லை.  சைட் மிரர், இன்ஜின், அலாய் வில்கள், எக்ஸாஸ்ட் கறுப்பு நிறத்தில் உள்ளன. மேலும் ஆர்பிஎம் மீட்டரோடு 2 டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர், கடிகாரம் என அனைத்தும் டிஜிட்டலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் சுஸுகி பைக்கில் உள்ளது போன்ற கியர் இண்டிகேட்டர் இல்லை. கைப்பிடிகள், சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. ஆனால் இன்ஜின் கில் சுவிட்ச் இல்லை. இந்த பைக்கின் சீட் வசதியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது.

இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:


ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் இருப்பது புதியதாக வடிவமைக்கப்பட்ட சிங்கிள் சிலிண்டர் மற்றும் கார்புரேட்டர் கொண்ட 162.7 சிசி HET இன்ஜினைக்கொண்டுள்ளது. பவர் 14.5 bhp சக்தியை 8,000 ஆர்பிஎம்மிலும், 1.46 kgm டார்க்கை 6,000 ஆர்பிஎம்மிலும் அளிக்கிறது. மேலும் பழைய பைக்கின் எடையை விட 11 கிலோ  குறைவு. இன்ஜினில் இருந்து பவர் ஒரே சீராக ரெஸ்பான்ஸிவாக வெளிப்படுகிறது. மேலும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால் நல்ல சத்தத்தோடு இன்ஜின் நன்றாக ரெவ் ஆகிறது. லைட்டான கிளட்ச் 6 கியர்களையும் எளிதாக மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் வைப்ரேஷன் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது. ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கின் அதிகபட்ச வேகம் 110 கிலோ மிட்டர். மேலும் வாகனத்தின் கிரவுண்ட்  கிளியரன்ஸ் 150MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.

ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:






சிட்டி டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும் வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது ஹோண்டா. ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. சீட்டிங் பொசிஷன் தினமும் நகருக்குள் பைக்கை ஓட்டுவதற்கு ஏற்ப இருக்கிறது. மேம்படுத்தப்பட்ட டிசைன் கொண்ட12லிட்டர் கொள்ளளவு கொண்ட பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை நன்றாக வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் சிறப்பாக இருக்கிறது. 17 இன்ச் MRF டியுப்லேஸ் டயர்கள் போதுமான கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க மோனொஷாக் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும் நிலைத்ததன்மையும் அளிக்கிறது. ஹோண்டா யூனிகார்ன் 160 பைக்கில் முன்பக்கம் 240 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 130 மிமீ டிரம் பிரேக்கையும் கொண்டுள்ளது. அதனால் பிரேக்கிங் போதுமான அளவில் தான் உள்ளது. ஆனால் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டள்ள கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் நம்பிக்கையை அளிக்கிறது.

மைலேஜ் மற்றும் விலை:





ஓரு லிட்டர் பெட்ரோலுக்கு 62 கிலோமிட்டர் துாரம் செல்லும் என்கிறது ஹோண்டா. நமது சிட்டி டிராபிக்கில், ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 45 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. சென்னையில் இவ்வாகனத்தின் ஆன் ரோடு விலை ரு. 83, 949 மற்றும் கம்பைண்டு பிரேக்கிங் சிஸ்டம் கொண்ட பைக்கின் ஆன் ரோடு விலை ரு. 89, 788. இந்த விலைக்கு புதிய ஹோண்டா யூனிகார்ன் 160 நகருக்குள் தினமும் ஓட்டுவதற்கு ஏற்ப பிராக்ட்டிக்கல் பைக்காக இருக்கிறது. ஆனால் போட்டியாளர்கள் போல ஸ்போர்ட்டியாக இல்லை என்பதே இதன் மைனஸ்.

No comments:

Post a Comment