பஜாஜ் பல்ஸர், 2001ல் இருந்து இந்திய மிடில் கிளாஸ் ஆண்களின்
இதயத்தில் நீங்கா இடம் பிடித்த பைக்காக இருக்கிறது. யமஹா R15, ஹோண்டா CBR 150R என ஸ்டைலான
போட்டியாளர்களால் விற்பனை இறங்கியது. மேலும் தனது குடும்பத்திற்குள்ளே [கேடிஎம்
DUKE மற்றும் RC] போட்டி உண்டாவதை உணர்ந்த பஜாஜ், தான் இதுவரை இறங்காத ஃபுல் ஃபேரிங்
பைக் செக்மெண்டில், பல்ஸர் ரேஸ் ஸ்போர்ட் 200 [RS200] என்ற பைக்கை தயாரித்து களமிறங்கியுள்ளது.
அது எப்படி உள்ளது என்பதை பார்ப்போம்.
டிசைன் மற்றும் சிறப்பம்சங்கள்:
பிரம்மாண்டமான ஃபுல் ஃபேரிங் பொருத்தப்பட்டுள்ள இந்த பைக்கின்
முன்பக்கத்தில் புரொஜெக்ட்டர் ஹெட்லைட் மற்றும் LED பைலட் விளக்குகள் சேர்க்கப்பட்டுள்ளது.
ரியர் வியூ கண்ணாடிகள் பின்னால் வரும் வாகனங்களைத் தெளிவாகக் காட்டுகின்றன. ஸ்பிளிட்
சீட், 2 பீஸ் ஹேண்டில்பார், சைலன்ஸர் போன்றவை ரேஸ் பைக்குகளில் இருப்பதுபோன்று அருமையாக
டிஸைன் செய்யப்பட்டிருக்கிறது. பின்பக்க டிஸைன் வித்தியாசமாக இருந்தாலும், டெயில் லைட்
டிஸைன், பைக்கின் முன்பக்க பிரம்மாண்டத்தோடு பொருந்தவில்லை. தரமான அலாய் பாகங்கள் எடைக் குறைப்புக்காக
பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்ஜின் கில் சுவிட்ச் உள்ளது. மேலும் அனலாக் ஆர்பிஎம் மீட்டரோடு டிரிப் மீட்டர், ஸ்பீடோ மீட்டர், ஃப்யூல் மீட்டர், கடிகாரம் டிஜிட்டலில் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால் ஸுசுகி பைக்கில் உள்ளது போன்ற கியர் இண்டிகேட்டர் இல்லை. கைப்பிடிகள், BACKLIT சுவிட்ச்சுகள் தரமாக இருக்கின்றன. இந்த பைக்கின் பில்லியன் சீட் R15 மற்றும்
RC 200/390 ஆகியவற்றோடு ஒப்பிடும் போது வசதியாக உள்ளது. ஒட்டு மொத்தமாக வாகனத்தின் பெயின்ட், பினிஷ் மற்றும் கட்டுமானத் தரம் சிறப்பாக உள்ளது. வாகனத்தின் கிரவுண்ட் கிளியரன்ஸ் 157MM, இன்ஜின் அடிபடாமல் இருக்க உதவுகிறது.
இன்ஜின் பெர்ஃபாமென்ஸ்:
பல்ஸர் RS200 பைக்கில் இருப்பது, பல்ஸர் NS200 பைக்கில் இருந்த
அதே சிங்கிள் சிலிண்டர் மற்றும் லிக்விட் கூல்டு இன்ஜினைக்கொண்டுள்ளது. மேலும்
NS200 பைக்கைவிட [145 கிலோ] RS 200 பைக்கின்
எடை 20 கிலோ அதிகம். அதனால் பஜாஜ் கார்புரேட்டருக்கு பதிலாக ஃப்யூல் இன்ஜெக்ட்ஷனைச்
சேர்த்து பவரை அதிகரித்திருக்கிறது. பவர் 9,750 rpm-ல் 24.5bhp சக்தியை வெளிப்படுத்துகிறது
மற்றும் 8,000 ஆர்பிஎம்-ல் 1.86kgm டார்க்கை வெளிப்படுத்துகிறது. இதனால் இன்ஜினில்
இருந்து பவர் ஒரே சீராக ரெஸ்பான்ஸிவாக வெளிப்படுகிறது. மேலும் ஆக்ஸிலரேட்டரை முறுக்கினால்
நல்ல சத்தத்தோடு இன்ஜின் நன்றாக ரெவ் ஆகிறது. லைட்டான கிளட்ச் 6 கியர்களையும் எளிதாக
மாற்றுவதற்கு உதவுகிறது. இன்ஜின் ஸ்முத்தாக இயங்குவதால் வைப்ரேஷன் கன்ட்ரோல் செய்யப்பட்டுள்ளது.
பல்ஸர் RS200 பைக்கின் அதிகபட்ச வேகம் 141 கிலோ மிட்டர்.
ஓட்டுதல் தரம் மற்றும் கையாளுமை:
சிட்டி டிராபிக் மற்றும் நெடுஞ்சாலையில் வசதியாக பயன்படுத்தும்
வகையில் வாகனத்தை வடிவமைத்துள்ளது பஜாஜ். சீட்டிங் பொசிஷன் ஸ்போர்ட்டியாகவும், தினமும்
நகருக்குள் ஓட்டுவதற்கு ஏற்ப கொஞ்சம் உயரமாகவும் இருக்கிறது. 13லிட்டர் கொள்ளளவு கொண்ட
பெட்ரொல் டேங்க் கால்களுக்கு நல்ல சப்போர்ட் அளிக்கிறது. 17 இன்ச் MRF டியுப்லேஸ்
டயர்கள் நல்ல கிரிப்பை அளிக்கிறது. முன்பக்க டெலிஸ்கோபிக் மற்றும் பின்பக்க நைட்ராக்ஸ்
மோனொஷாக் ஸ்பிரிங் சஸ்பென்ஷன் மோசமான சாலைகளிலும் நல்ல ஓட்டுதல் தரத்தையும் நிலைத்ததன்மையும்
அளிக்கிறது. அதிக வேகங்களில் வாகனத்தின் கையாளுமை நன்றாக
வளைவுகளில் வளைத்து நெளித்து ஓட்டும் வகையில் சிறப்பாக மேம்பட்டுள்ளது. ஆனால், இன்ஜின்
அதிகமாக சூடாவதோடு, இன்ஜின் சூடு சீட் வரை வருகிறது. RS 200 பைக்கில் முன்பக்கம்
300 மிமீ டிஸ்க் பிரேக்கையும், பின்பக்கம் 230 மிமீ டிஸ்க் பிரேக்கையும் கொண்டுள்ளது.
மேலும் ஆஃப் செய்ய முடியாத முன்பக்க ஏபிஎஸ் பிரேக் ஆப்ஷனாகக் கொடுக்கப்பட்டள்ளது.
அதனால் ஏபிஎஸ் பிரேக் கொண்ட பல்ஸர் பிரேக்கிங்கில் அசத்துகிறது.
மைலேஜ் மற்றும் விலை:
நமது சிட்டி டிராபிக்கில் , ஒரு லிட்டர்
பெட்ரோலுக்கு RS 200 பைக், அதிகரிக்கப்பட்ட
வாகனத்தின் எடை காரணமாக 32 கிலோ மிட்டர் மைலேஜ் கிடைக்கிறது. சென்னையில் இவ்வாகனங்களின் எக்ஸ்
ஷோரும் விலை RS 200 ABS: ரு.132,694 மற்றும் RS 200 NON-ABS: ரு.120,486. இதன் முலம்
போட்டியாளர்களை விட குறைந்த விலையில் நல்ல வாகனத்தை தயாரிக்க முடியும் என்று மிண்டும்
ஒரு முறை பஜாஜ் நிருபித்து இருக்கிறது. மேலும் போட்டியாளர்களை விட அதிக சிறப்பம்சங்கள்
மற்றும் பெர்ஃபாமென்ஸ், நகருக்குள் தினமும் ஓட்டுவதற்கு ஏற்ப ஈஸியான பைக்காக இருக்கிறது.